pyaar premam kadhal

   படம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கியம் கொடுத்துள்ளமனர்.   இளைஞர்கள் மட்டுமல்ல இளமை கடந்து அனைவரும் தங்கள் இளமையை நினைக்க வைக்கும்  காதல் படம். எடுத்த விதம் கதை அமைப்பு தேர்ந்தெடுத்த இடம்(லொக்கேஷன்) இன்னும் அருமை. பாடல்கள் ஒவ்வொன்றும் மனதில் நிற்பவை.
என்ன கவர்ந்த விடையம் என்றால் படத்தில் வரும் மூன்று பெண் கதாப்பாத்திரப் படைப்பு தான் . முதல் கதாப்பாத்திரம் பள்ளிக்கூட மாணவி. ஊரை திரண்டு காதலுக்குகாக அவள் பின்னே ஓடுகின்றது. அவருக்கு காவல் வேலையாக இருக்கும் புள்டாக் என்று பொடியன்கள் பயத்துடன் அழைக்கும் அவள் அப்பா. அவள் பின்னால் பல விடலைகள் சுற்றினாலும் அவள் அலட்டி கொள்ளவே இல்லை. தமிழ் படக் கதாநாயகி போல் பயந்து அழது சாகவுமில்லை போராளியாக வெடித்து சாடவுமில்லை. மிகவும் லாவகமாக தைரியமாக புத்திசாலித்தனமாக கையாளுகுன்றார் பசங்களை. 
அடுத்தது கல்லூரி பேராசிரியை அதுவும் கொடைக்கானலில் இருந்து வரும் இளம் பேராசிரியாக சாய் பல்லவி என்ற நடிக்க தெரிந்த ஒருவர் நடித்துள்ளார். அந்த பெண் கதாப்பாத்திரமும் இளம் துடிப்பான சவாலான மாணவனை மிகவும் சாதுரியமாக கையாளுகின்றார் சில இடங்களில் ஏமாற்றுகின்றாதீகொஞ்சம் நெருடலாக இருந்தால் கூட). மாணவனுக்கு காதல் ஆசிரியையிடம் ஏன் வருகின்றது என்று கேள்விக்கு நியாயம் கற்பிக்காது; ஆசிரியை, அந்த மாணவனிடம் இருந்து சாதுரியமாக தப்பித்து கொள்வது அருமை.
அடுத்து கதாநாயகன் கைபிடிக்கும் தனக்கு கணவராக வரப்போகும் மனிதனின் எல்லா பக்கங்களையும் அறிந்து தன் வாழ்க்கையின் எல்லா பக்கஙகளையும் பகிர்ந்து பக்குவமாக ஏற்று கொள்ளும் இளம் பெண். சில கயவர்களால் பெண்கள் வாழ்க்கையில் வரும்; பெற்றோரால் தீர்க்க இயலாத பிரச்சினைகளைக் கூட கணவர்களால்  தீர்க்க வல்லது என்று ஒரு காட்சி ஊடாக சொல்கின்றது படம்.
இந்த மூன்று இயல்பான கதை அம்சம் கொண்ட கதாப்பாத்திரவும்  சாதாரண பெண்களை நினைவுப்படுத்துபவர்களாகவே இருந்தனர். சமீபத்தில் நான் பார்த்த "நானும் ரவுடி  தான் " படக்கதாநாயகி நயனும் மனதில் வந்து சென்றார். அணிவது எல்லாம் மாடன் உடை நடப்பது மாடேனாக; பேசுவது, செய்வது எல்லாம் முட்டாள் தனம் பைத்தியக்காரத்தம்! . 
இன்னும் ஒரு எடுத்து கூறவேண்டிய விடையம் மலையாளப்படத்தில் தமிழ் பெண் கதாப்பாத்திரம் என்றாலே பிச்சைக்காரி, வீட்டு வேலைக்காரி அல்லது வில்லனின் வைப்பாடி என்றபடியாகத்தான்  காட்டுவார்கள். இதில் ஒரு தமிழ் கல்லூரி பேராசிரியை; அவர் பின்னால் வழிந்து அலையும் ஒரு முரட்டு மாணவன் ஓர் வழிசல் பேராசிரியர். இவர்களை சிரித்த முகத்துடனே சமாளித்து, வாழ்க்கையில் தன் உறவினரை மணம் முடிக்கின்றார். அவர் தொழில் சார்ந்தும் திறமையானவர், எல்லா  மாணவர்களையும் ஒருங்கிணைத்து   முன்னேற செய்பவர்.  மொத்ததில் ஆளுமையான பெண் கதாப்பாத்திரம். ஒரு இடத்திலும் தமிழர்கள் மனதை புண் படுத்தும் படியான " ஒரு  வார்த்தையும் வரவில்லை.  80-90 மலையாளப்படங்களில் தமிழர்களை புண்படுத்தும் வார்த்தைகள் கருத்தாக்கங்கள் பரவி கிடந்துள்ளது கண்டுள்ளோம். அவ்வகையில் மலையாளிகள் தமிழர்கள் கலாச்சாரத்தை தனிதன்மையை மேலும் மதிக்க கற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ரசிக்கும் படியான தமிழ் மல்லிகைப்பூ சென்றிமென்றில்   "நான் கோயிலுக்கு போடுவேன்" போன்ற தமிழ் உரையாடல்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் கொடுத்து சரி செய்திருக்கலாம்.  பொதுவாக தமிழ் படங்களில் கதாநாயகன் வாங்க நீங்க என பேசுவார் கதாநாயகி போடா வாடா என்பார். ஆனால் மலையாளப்பட தமிழ் நாயகி நீங்க வாங்க என கதைக்கின்றார் நாயகனோ ஆசிரியையாக இருந்தும் நீ ...உனக்கு என கதைக்கின்றார்.
என் மகன்,  படம் எப்படி இருக்கு என்று என்னிடம் கேட்டான். படம் எடுத்த விதம் நல்லா தான் இருக்கு ............ஆனால் காதலிக்க  ஆசிரியை தான் கிடைத்தாரா என்றேன். அவனும்  அவன் நண்பர்களிடம் என் கருத்தை கூறினானாம் அவர்கள் கூறினார்களாம் இது உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று. எது எப்படியோ கல்லூரி சாலை மாணவர் காதலில் ஆசிரியர்களையும் கதாபாத்திரமாக வர துவங்கினால் பெரிய அபாயக் குறி தான். மகாபாரத கதை தான் நினைவில் வருகின்றது. விராட மன்னரின் மகளுக்கு போர் புரிய  இரத ஓட்டியான அர்சுனனன் உதவியிருப்பார். போரில் வெற்றி கொண்ட போது மன்னர் தன் மகளை அர்சுனனுக்கு மணம் முடித்து கொடுக்க மகிழ்ச்சியுடன் முன் வருவார். ஆனால் அர்சுனனனோ நான் குரு இடத்தில் இருந்து வித்தையை கற்று கொடுத்தவன். ஒரு குரு மாணவியை மணம் முடிப்பது சாஸ்த்திரத்தால் ஆகாது உங்களுக்கு விருப்பம் எனின் என் மகனுக்கு மணம் முடித்து கொடுங்கள் என்பார். ஆனால் நியத்தில் பல ஆண் ஆசிரியர்கள் தங்களுடைய பல மாணவிகள் தற்கொலைக்கு காரணமானது கூட்டி கொண்டு ஓடி  தாலி கட்டினவர்கள் என பல வகையில் உண்டு. இது போன்ற ஈனச்செயல்களை கண்டு கொள்ளாத கலாச்சார உலகம் ஆசிரியைகளும் வேட்டையை ஆரம்பித்தத போது வெகுண்டு எழுந்தனர். 
ஆனால் படம் பார்க்க பார்க்க மனம் பதைபதைத்தது. ஆசிரியை பதவியின் மாண்பை  இந்த படம் காத்தது என்பதிலும் படக்குழுவுக்கு ஒரு வணக்கம்.  
மொத்தத்தில் எல்லோரையும் தங்கள் பள்ளி கல்லூரி வளாகத்திற்குள் அழைத்து செல்லும் படம். கடைசியாக காதல் பற்றிய ஒரு தத்துவம் சொல்லுவார்கள்   எல்லார் வாழ்க்கையிலும் பட்டாம்பூச்சி போல் வரும் பைத்தியம் போன்றது காதல் என்று. காதல் ஒரு பைத்தியம் தான். அதை வாழ்க்கைக்கு உதவுவதாக மாற்றும் தன்மை, அறிவான மனிதர்களிடம் உள்ளது என்று சொலியுள்ளார்கள். ஆட்டோகிராப் திரைப்படத்தை  நினைவுப்படுத்திய மொத்தத்தில் ரசிக்கும் படியான படம் பிரேமம்!.

Comments

Popular posts from this blog

agni siragugal - book review

heritage of my native