கடவுளை அனுப்பிவிட்டு காதலி!
- நா.முத்துக்குமார்
உன் ஞாபகம் வருகிறது.
உன் ஞாபகம் வரும்போதெல்லாம்
மழை பெய்கிறது!
மார்க்வெஸ்,
நீட்ஸே
காஃப்கா,
காம்யூ...
பழைய புத்தகக் கடையில்
விற்று
சுடிதார் வாங்குபவனே
சிறந்த காதலன்!
உன்னுடன் பேசும்
ஒவ்வொரு
வார்த்தையும்
மூன்று முறை
உச்சரிக்கப்படும்.
பேசுவதற்கு முன்பு
பேசும்போது
பேசிய பிறகு!

பேசுவதற்காகவே
எல்லோரிடமும்
பேசிக்கொண்டிருக்கிறேன்!
இருப்பதிலிருந்து
இல்லாததையும்
இல்லாதவற்றிலிருந்து
இருப்பதையும்
தேடுவதே காதல்!
நீ பார்த்த நிலவும்
நான் பார்த்த நிலவும்
நிலவாக மட்டுமே இருந்தது.
நாம் பார்த்த நிலவிற்குதான்
நினைவு என்ற பெயர்
கிடைத்தது!
உன் நதியில்
சுழித்தோடும்
சின்னஞ்சிறு சருகு
நான்.
உன் இஷ்டப்படி
எங்கேனும்
கூட்டிச் செல்!
கடவுளுடன்
காபி
சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்
நீ வந்தவுடன்
'சரிப்பா கிளம்புகிறேன்’
என்றார்!
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர் கடையில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கடைசிப் பேருந்தையும்
விட்டுவிட்டு
கேட்டுக்கொண்டிருக்கிறது
காதல்!
நிழலில் மட்டும்தான்
ஓய்வெடுக்க முடியுமா?
நான் ஓய்வெடுப்பது
உன் கண்களின்
வெளிச்சத்தில்...
Comments
Post a Comment